Annual Literary Competition - Rules & Regulations
32 ஆம் ஆண்டு இலக்கியப் போட்டிகள் – 2024
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், இந்த ஆண்டு (2024) 32-ஆம் ஆண்டாக, சிறுகதை, மரபுக்கவிதை, கட்டுரை, புதுக்கவிதை, மாணவர்களுக்கான சிறுகதை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய இலக்கியப் போட்டிகளைக் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் நடத்தப்படுகின்றது. இலக்கியத் துறையில் ஆர்வமுள்ள எழுத்தாளர்களும் உயர் கல்விக் கூடங்களைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில், 1.4.2024 முதல் 30.6.2024 வரையில் இப்போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன.
1. நோக்கம்
தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் கீழ்க்காணும் துறைகள் சார்ந்து மிகுபயன் விளைவித்தல்.
அ. மொழிசார்ந்த இலக்கிய வடிவங்களின் புதிய பரிணாம வளர்ச்சிகள்.
ஆ. இனம் சார்ந்த கலை, கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளை வளப்படுத்துதல்.
இ. சமுதாய முன்னேற்றத்திற்குக் கல்வி, அறிவியல், வாணிகம், தொழில் சார்ந்த படைப்பிலக்கியங்களின் வழி வாழ்க்கை மேம்படுதல்.
ஈ. மனிதநேயமும் அகமேம்பாடும் படைப்பிலக்கியங்களின் வழி வளர்த்தல்.
2. பரிசுத்தொகைகள்
- முதல் பரிசு – மலேசிய ரிங்கிட் – 2,500
- இரண்டாம் பரிசு – மலேசிய ரிங்கிட் – 1,750
- மூன்றாம் பரிசு – மலேசிய ரிங்கிட் – 1,250
- ஆறுதல் பரிசுகள் – மூன்று தலா மலேசிய ரிங்கிட் – 500
3. பிரிவுகள்
(i) பொது
அ. சிறுகதை
ஆ. கட்டுரை
இ. மரபுக்கவிதை
ஈ. புதுக்கவிதை
(ii). மாணவர்
அ. சிறுகதை
4. படைப்பு
அ. துறை – கொடுக்கப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு துறைச்சார்ந்ததாக இருக்க வேண்டும்
ஆ. மொழி – தமிழ்
இ. மொழித்தரம் – தமிழ்மொழியின் இலக்கணம், சொல்லாட்சி, மரபு ஆகிய கூறுகளில் தரமுடையதாக இருக்க வேண்டும்.
ஈ. பங்கேற்புத்தகுதி – கொடுக்கப்படும் தலைப்புக்கேற்பவும் சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும்.
5. படைப்பாளர் தகுதிகள்
அ. பொதுப்பிரிவு
மலேசிய நாட்டு குடியுரிமையுள்ள எழுத்தாளர்கள் மட்டுமே இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். ஒருவர் ஒரு துறையில் ஒரு படைப்பை மட்டுமே போட்டிக்கு அனுப்பி வைக்கமுடியும். படைப்புகள் தங்களது சொந்தப் படைப்பு என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்துடன் தங்களின் தெளிவான அடையாள அட்டையின் நகலும், அண்மையப் புகைப்படமும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
(படைப்பாளர்கள் தமது அசல் படைப்புடன் மேலும் இரு நகல்கள் எடுத்து 3 படிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.)
ஆ. மாணவர் பிரிவு
மாணவர் பிரிவு படைப்பாளர்கள், உயர் கல்விக்கூடங்கள் (ஆறாம் படிவம் / கல்லூரிகள் / மெட்ரிகுலேஷன்) மற்றும் பல்கலைக்கழகங்களில் முழுநேரமாகப் பயில்கின்றவர்களாக இருக்கவேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் தங்களின் சொந்தப்படைப்பு என்பதை உறுதி செய்யும் வகையில், தங்கள் கல்விக்கூடங்களின் பொறுப்பாசிரியரின் உறுதிச்சான்றிதழையும் இணைத்து, தெளிவான அடையாள அட்டையின் நகலுடன், அண்மையில் எடுத்துக்கொண்டப் புகைப்படத்தோடு அனுப்புதல் வேண்டும்.
6. போட்டிப் பிரிவுகள்
அ. சிறுகதை
சிறுகதைகள், மனித வாழ்வியலோடு ஒட்டிய சம்பவங்கள், சமுதாய உணர்வுகள், சீர்திருத்தக் கருத்துக்கள் ஆகியவற்றை சுவைப்படச் சித்தரிப்பதாக படைப்புகள் 5 பக்கங்களுக்குள் அமைய வேண்டும்.
ஆ. மரபுக்கவிதை
எண்சீர், அறுசீர் விருத்தங்களாகவும், நான்கடி சந்தப்பாடலாகவும் ‘ தமிழினத்தின் வேருக்கு நீராக’ அல்லது ‘நலிந்துவரும் தமிழை உயர்த்திடுவோம் வாரீர்’ என்ற தலைப்புகளில் ஒன்றனுக்கு 80 வரிகளுக்கு மேற்போகாமல், கவிதைகள் எழுதப்பட வேண்டும். மலேசியத் தமிழர்களின் முன்னேற்றம், மேன்மைக்கான வழிகள் என்ற கருப்பொருள் நாட்டப்படுவதுடன், மரபு பிசகாமல் கவிதைகள் அமைய வேண்டும். மேலும் ஒவ்வொரு படைப்பிலும் 10 உவமைகள் குறையாமல் இடம் பெற வேண்டும்.
இ. புதுக்கவிதை
“ஏக்கத்தின் கண்ணீர்த்துளிகள் ” அல்லது ‘ கானல் கனவுகள்’ என்ற பொருளில், 80 வரிகளுக்கு மிகாமல் புதுக்கவிதைகள் எழுதப்பட வேண்டும். வழங்கப்பட்டுள்ள தலைப்பை உள்ளடக்கியே கவிதைகள் அமைய வேண்டும்.
ஈ. கட்டுரை
படைப்புகள் ஆய்வுக்கட்டுரையாகவும், உரிய சான்றுகள், துணை நூல்களின் குறிப்புகளுடனும் அமைய வேண்டும். வழங்கப்பட்டுள்ள ஒரு தலைப்பில், 8 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை அமைய வேண்டும்.
தலைப்புகள்
அ. நகரமயமும் தமிழ்ப்பள்ளிகளும்
ஆ. செயற்கை நுண்ணறிவை நோக்கி சமுதாயம்
உ. பொது விதிகள்
(i) எல்லா படைப்புகளும் கணினியில் தட்டச்சு (எழுத்துரு 12) செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
(ii) போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் படைப்புகள் அனைத்தும், வேறு எந்த நூல்களிலோ, சிறுகதை, கவிதைத் தொகுப்புகளிலோ, நாளிதழ்களிலோ, மாத, வார இதழ்களிலோ பிரசுரிக்கப்பட்டவைகளாகவோ அல்லது மின் ஊடகங்களில் வெளிவந்தவைகளாகவோ இருக்கக்கூடாது.
(iii) போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் படைப்புகள், குறிப்பிட்ட ஓர் இனத்தையோ, மதத்தையோ சிறுமைப்படுத்துவதாக இருந்தாலோ, இனத்துவேசம், தேச நிந்தனை, மற்றும் நாட்டுப்பற்றுக்கு ஊறு விளைவிக்கும் கருத்துக்களைக் கொண்டிருந்தாலோ, அவை பங்கேற்பில் இருந்து நீக்கப்படும்.
(iii) போட்டியில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள், தனித்தாளில் தங்களின் முழுப்பெயர், புனைப்பெயர், முகவரியையும் ஆங்கிலத்தில் எழுதி, தங்களது படைப்புகளுடன் அடையாள அட்டையின் நகலையும் இணைத்து அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
(மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களும், தகவல்களும் இணைக்கப்படாவிடில், அனுப்பி வைக்கப்படும் படைப்புகள் போட்டிகளில் இருந்து தவிர்க்கப்படலாம்.)
ஊ. நடுவர்கள்
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின், டான் ஸ்ரீ கே,ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் நியமிக்கின்ற நடுவர்களால், வெற்றி பெறும் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களின் முடிவே இறுதியானதும் ஆகும். இந்தப் போட்டிகள் மற்றும் முடிவுகள் குறித்த கடிதம் அல்லது தொலைபேசி தொடர்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது. கூட்டுறவு சங்கத்தில் தற்போது பணிபுரிபவர்கள் இந்தப்போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
போட்டிக்குரிய எல்லா படைப்புகளும் எதிர்வரும் 30.06.2024 ஆம் நாளுக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு வந்து கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
DATUK B.SAHADEVAN PJN,SSA,PPT,ANS
THE MANAGING DIRECTOR / SECRETARY
32nd Literary Contest 2024
Tan Sri K.R.Soma Language & Literary Foundation,
National Land Finance Co-operative Society Ltd
Level 10, WismaTun Sambanthan
Jalan Sulaiman, Peti Surat 12133,
50768 Kuala Lumpur